ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்து என்ற வாலிபர், நீண்ட நாட்களாகப் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இறங்க மறுத்து வினோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், டவர் மீது இருந்த ஹனுமந்துவிடம் கீழே இறங்கி வருமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வலியுறுத்தினர்.
ஆனால் போலீசாரின் பேச்சை கேட்க மறுத்த அந்த வாலிபர், “எனக்கு இப்போதே கஞ்சா வேண்டும், தயவு செய்து ஒரு கஞ்சா பாக்கெட் வாங்கிக் கொடுங்கள், அப்போதுதான் கீழே இறங்குவேன்” என்று டவர் உச்சியில் இருந்து கூச்சலிட்டு அடம் பிடிக்கத் தொடங்கினார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அவரிடம் நயமாகப் பேசி ஒருவழியாகச் சமாதானம் செய்து, அவரை பத்திரமாக கீழே இறக்கினர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போதைக்கு அடிமையான ஹனுமந்து தீவிர மன அழுத்தத்தில்இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு விபரீதமாக நடந்துகொண்டார் என்றும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
