இத்தாலியின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமான மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடந்த பயங்கர விபத்தில், 35 வயது கட்டுமான தொழிலாளி ஆண்ட்ரியா ருஸ்ஸோ உயிரிழந்தார். கால்சினே பகுதியில் வசித்த அவர், தனது காரை விமான நிலைய நுழைவுப்பகுதியில் விட்டுவிட்டு, பாதுகாப்பு எல்லைகளை மீறி ஓடுபாதை வழியாக புகுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பார்சிலோனாவை தலைமையிடமாகக் கொண்ட வோலோடியா ஏர்லைன்ஸின் A319 ஏர்பஸ் விமானம் (V73511 BGY–OVD) புறப்பட தயாராக இருந்த நிலையில், ஜெட் எஞ்சின் செயல்பட்டுகொண்டிருந்தது (start )  நேரத்தில், ருஸ்ஸோ அந்த  இஞ்சினுக்குள்  இழுக்கப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவத்தின் போது விமானத்தில் பயணித்த 154 பயணிகள், இந்த கோரமான சம்பவத்தை  நேரில் கண்டனர். விமானத்தின் கேப்டன், “திடீரென  கடுமையான பிரச்சனை” ஏற்பட்டுள்ளதாக அறிவித்ததும் பயணிகள் பதற்றமடைந்தனர். சிலர் ஜன்னல் வழியே வெளியே பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“>

 

விமான பணிப்பெண்கள் பயணிகளிடம் ஜன்னல் ஷட்டர்களை மூடச் சொல்லியதாகவும், தீயணைப்பு வீரர்கள் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்த மற்ற பயணிகளும், முதலில் இது தாக்குதல் சம்பவமா? என எண்ணி கலக்கம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தற்போது இத்தாலி பாதுகாப்புத்துறை, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறையினர் சேர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ருஸ்ஸோவுக்கு போதைப்பொருள் பிரச்சனை இருந்ததா?, அல்லது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தற்கொலையா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சுமார் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்குப் பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது என விமான நிலைய நிர்வாகம் SACBO தெரிவித்துள்ளது. இந்த கோர சம்பவம் பயணிகளின் மனதை மிகவும்  பாதித்துள்ளது.