தாய்லாந்தில் பொழுதுபோகவில்லை என்பதற்காக வனப்பகுதிக்குத் தீ வைத்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தீ வைத்ததற்குக் கூறிய விசித்திரமான காரணம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

தாய்லாந்தின் பிட்சானுலோக் மாகாணத்தில் உள்ள ‘காங் ஹாட் ஓய்’  வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வந்தது. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞரை அதிகாரிகள் கையைப் பிடித்துப் பிடித்தனர்.

அந்த இளைஞரிடம் சோதனையிட்டபோது அவரிடம் ஒரு ‘லைட்டர்’ (Lighter) இருந்தது. அவர் வனப்பகுதிக்குள் வந்ததற்கான முறையான காரணத்தைச் சொல்லத் தெரியாமல் விழித்தார். பின்னர் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், “தனக்கு மிகவும் போரடித்ததாகவும், ஒரு ஜாலிக்காக தீ வைத்ததாகவும்” ஒப்புக்கொண்டார்.

தாய்லாந்து ஏற்கனவே கோடைக்காலத்தில் ஏற்படும் இயற்கை காட்டுத் தீயால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில், ஒரு தனிநபரின் பொறுப்பற்ற செயலால் பல ஏக்கர் வனப்பகுதி சாம்பலானது அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, “இவ்வளவு போரடித்தால் உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாமே”, “இயற்கையோடு விளையாடுவது விபரீதத்தில் முடியும்” எனப் பலரும் அந்த இளைஞரைக் கண்டித்து வருகின்றனர். அந்த இளைஞர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.