ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த பூபதி என்ற நபர் கடந்த ஜூன் 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு சில நாட்களுக்குப் பிறகு வலி ஏற்பட்டுள்ளது.

உடனே ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த அதில் தலையில் தையல் போட்ட இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணி வைக்கப்பட்டு தைத்திருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமாக அந்த துணியை மருத்துவர்கள் அகற்றினர். இந்த நிலையில் கவன குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூபதி புகார் அளித்துள்ளார்.