ஹரியான மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள நவோதயா வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது மாணவி ஜான்வி, பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் மாணவிகளுக்கு இடையே பிரியாணி சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், எந்தத் தவறும் செய்யாத தனது மகளை ஆசிரியை ஒருவர் சுமார் நான்கு மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துச் சித்திரவதை செய்ததாக ஜான்வியின் தந்தை பிரமோத் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கடுமையான மன உளைச்சலே அவரது முடிவுக்குக் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், குடும்பத்தினரின் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பள்ளியின் முதல்வர் ஆர்.கே. சர்மா முற்றிலும் மறுத்துள்ளார். மாணவிக்கு எந்தவிதத் தண்டனையும் வழங்கப்படவில்லை என்றும், அவர் கழிவறைக்குச் செல்வதாகக் கூறி வகுப்பறையை விட்டு வெளியேறிச் சென்று இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு முதலுதவிக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, பின்னர் பி.கே. மருத்துவமனைக்கு மாற்றியபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டபுவா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்த பிறகே உண்மைத் தன்மை வெளிவரும் எனத் தெரிவித்துள்ளனர்.