சமூக ஊடகங்களில் பாம்பு மீட்பு தொடர்பான காணொளிகள் அடிக்கடி வைரலாகும் நிலையில், எகிப்தின் அசியுட் மாகாணத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு காணொளி இணைய பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், பாரம்பரிய முறைகள் அல்லது நவீன உபகரணங்களைப் பயன்படுத்தாமல், குரல் மூலம் நாகப்பாம்பை கட்டுப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம், அசியுட் மாகாணத்திற்குட்பட்ட கர்ப் பானி பக்கர் கிராமத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வைரலாகும் காணொளியில் தோன்றுபவர் ஹஜ் ரமலான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக பாம்பு பிடிப்பவராக அறியப்படுபவர் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
فين الطريقه صحيح 🤣👌🔥🇪🇬 pic.twitter.com/qepMr2WjnD
— Aseel.𓊨𓋴𓇌𓃭𓁐 🔥🇪🇬 (@Aseel_Elhadi99) December 15, 2025
கிராமத்தில் உள்ள ஒரு பேரீச்சம்பழ மரத்தின் அடியில் இருந்த குழியில், இரண்டு பெரிய நாகப்பாம்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அச்சமடைந்த கிராம மக்கள் ஹஜ் ரமலானை உதவிக்காக அழைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அவர், தடிமனான உடை மற்றும் பாதுகாப்பு காலணிகள் அணிந்து பாம்புகளை அணுகியுள்ளார்.
காணொளியில், அவர் ஒரு நீண்ட குச்சியால் நாகப்பாம்பை எச்சரித்த பின்னர், திடீரென சத்தமாக கத்துகிறார். அதனைத் தொடர்ந்து, பேட்டை விரித்து தாக்கும் நிலையில் இருந்த நாகப்பாம்பு திடீரென சோர்வடைந்தது போல் தரையில் படுத்துக் கொள்வது பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியை காண கிராம மக்கள் பெருமளவில் திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹஜ் ரமலானின் விளக்கத்தின்படி, அந்தக் குழியில் இருந்த இரண்டு நாகப்பாம்புகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் ஆகும். காணொளியின் இறுதியில், அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு கிராமவாசி பாம்பின் வாலைப் பிடித்து, அதை பாதுகாப்பாக சாக்கில் அடைக்கிறார். பின்னர், இரு நாகப்பாம்புகளையும் துணிப்பையில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு ஹஜ் ரமலான் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
