திருமண வாழ்க்கையில் நம்பிக்கை முக்கியமானது என பொதுவாகக் கருதப்படும் நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அனுபவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு 500-க்கும் மேற்பட்ட வெளித் தொடர்புகள் இருந்ததை தாமதமாக அறிந்த பின்னர், அவரிடமிருந்து பிரிந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

ஜப்பானிய வார இதழான ஷுகன் பன்ஷுன் வெளியிட்ட தகவலின்படி, நேமு குசானோ என்பவர், தனது முன்னாள் கணவரை ஒரு நண்பர் மூலம் அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுள்ள நபராக அவர் தோன்றியதால், தனது கணவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்ததாக குசானோ தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தை, உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களை மட்டுமே பாதிக்கும் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கணவரின் நீண்ட வேலை நேரம் மற்றும் வீட்டிற்கு அரிதாக வருவது காரணமாக, குழந்தையை வளர்ப்பதற்கான பொறுப்பை குசானோ தனியாகவே ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், அவரது வாழ்க்கையில் திருப்பமாக, ஒருநாள் கணவரின் பையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகள் இருப்பதை அவர் கண்டறிந்தார். அதே நேரத்தில், அவரது கைப்பேசியில் உள்ள டேட்டிங் செயலிகளிலிருந்து வந்த அறிவிப்புகளும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, வேலைச் சுமை மற்றும் மன அழுத்தமே இதற்குக் காரணம் என கணவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. “வீட்டிற்கு மன அழுத்தத்தை கொண்டு வராமல், வெளியே அதை சமாளித்து கொள்கிறேன்” என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, குசானோ தனது கணவரின் தொலைபேசி பதிவுகள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவருக்கு 520 பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் அவரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆரம்பத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க நினைத்த அவர், அது தனது மகனின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை கைவிட்டார்.

பின்னர், கணவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது, அவர் பள்ளி பருவத்திலிருந்தே ஒரு உளவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்தது தெரியவந்ததாக குசானோ தெரிவித்துள்ளார். அந்த நோய் குறித்து அறிந்து கொள்வதே, தன்னை இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள உதவியதாக அவர் யோகா ஜர்னல் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மகனின் நலனை கருத்தில் கொண்டு, கணவருடன் சிகிச்சை முயற்சிகளிலும் குசானோ பங்கேற்றார். இருப்பினும், இருவரும் மீண்டும் இணைந்து வாழவில்லை. தற்போது தனியாக வாழ்ந்து தனது மகனை வளர்த்து வரும் குசானோ, தனது வாழ்க்கை அனுபவத்தை ஜப்பானிய மங்கா கலைஞர் பிரியோ அராயின் உதவியுடன் நகைச்சுவை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்தக் கதை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு, உறவுகள், நம்பிக்கை மற்றும் மனநலம் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.