பிரான்ஸ் நாட்டில், காரை நிறுத்த முயற்சிக்கும்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், 38 வயது பெண்மணி ஓட்டிச் சென்ற கார் நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயிலுவில் உள்ள லசியோட்டாவில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 8.50 மணியளவில் ஒரு சமூக ஓய்வு மையத்தில் நிகழ்ந்துள்ளது.
காரை நிறுத்துவதற்குப் பதிலாக பிரேக்கிற்குப் பதில் முடுக்கியை அழுத்தியதால், அதிகத் திறன் கொண்ட அந்த ஜாகுவார் எக்ஸ் எஃப் கார் சீறிப் பாய்ந்து சென்றது. வாகன நிறுத்துமிடத்திற்குப் பின்னால் இருந்த சரிவில் அதிவேகமாகச் சென்ற கார், தடுப்பையும் கண்ணாடிச் சட்டகத்தையும் உடைத்துக்கொண்டு, நூறு அடி தூரத்திற்கு ஓடி நீச்சல் குளத்திற்குள் விழுந்தது.
கார் நீருக்குள் மூழ்கியபோது, உள்ளே இருந்த அந்தத் தாயும் அவரது 5 வயது மகளும் சிக்கிக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த 20 பேர் அதிர்ச்சியில் ஓடியபோதும், அங்கிருந்த இரண்டு உயிர்காக்கும் வீரர்களும், நீச்சலுக்கு வந்த பொதுமக்களில் ஒருவரும் இணைந்து நீருக்குள் மூழ்கிய கார் உள்ளே இருந்து தாயையும் மகளையும் பத்திரமாக மீட்டனர்.
நல்வாய்ப்பாகப் பெரிய காயங்கள் இன்றி இருவரும் காப்பாற்றப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
