நாட்டில் பெரும்பாலான வாகன விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பது மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது தான். தற்போது இவற்றை தடுக்கும் விதமாக காரைக்குடி சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், சந்தோஷ், கார்த்திகேயன் ஆகியோர் ஒன்றிணைந்து சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளனர். இந்த “ஹெல்மெட்டை நாம் அணிந்திருக்கும் போது மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் அந்த வாகனம் இயங்காது. அதேபோல் அணியாமல் வாகனத்தில் வைத்திருந்தாலும் அந்த வாகனம் இயங்காது”.

இதன் காரணமாக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது குறைகிறது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான நவீன கண்டுபிடிப்பு சாதனங்களுக்கான போட்டியில் இந்த புதிய கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் நவீன தலைக்கவசம் மாநில அளவில் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி தாளாளர் பிச்சப்பா மணிகண்டன், செயலாளர் விஸ்வநாதன், துறை தலைவர் சொர்ணலதா, அனைத்து ஆசிரியர்கள், முதல்வர் டாக்டர் முத்துராமு மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டியுள்ளனர்.