மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில், பயிலும் பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் செருப்பால் அடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வடேகாவ் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த அரசுப் பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை மொத்தம் 19 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு அனில் ஜகன் ராவத் (54) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த இவர், மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக, சிறுமிகளிடம் வக்கிரமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பள்ளிச் சிறுமிகளுக்குத் தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, அவர்களிடம் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூலம் அவர்களது பெற்றோருக்குத் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் தாய்மார்கள் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குத் திரண்டு வந்து ஆசிரியரை முற்றுகையிட்டனர். அவரிடம் நியாயம் கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் ஆத்திரமடைந்த பெண்கள், அவரைப் பிடித்து இழுத்து வந்து ஊர்ச் சந்திப்பில் வைத்து செருப்பால் அடித்து வெளுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசாரணையில், இந்த ஆசிரியர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லாகந்தூர் தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றியபோதும், இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் இந்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் திருந்தாத அந்த ஆசிரியர் மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.