பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் மற்றும் பரிசுப் பொருள் முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், தற்போது தனது மனைவி புஷ்ரா பீபியுடன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்தநிலையில், இருவரும் சிறையில் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார். “சிறையில் என் மீது கர்நலும், சிறை கண்காணிப்பாளரும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த நடவடிக்கைக்கு ராணுவ தளபதி அசிம் முனீர் தான் காரணம். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அவரே முழுப்பொறுப்பாளர்” என சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், புஷ்ரா பீபியின் அறையில் உள்ள தொலைக்காட்சியும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் அரசியல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கட்சி PTI, இம்ரான் கானை விடுவிக்க நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் உள்ளாட்சி மற்றும் ராணுவ மேலாதிக்கம் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
