மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு கோயிலில், சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதாவது சிங்க்ரஹா பகுதியில் உள்ள ஒரு கோயிலில், திங்கள்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அந்த இளைஞரைபிடித்தனர். ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் காஜி மொஹல்லா பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (எ) ரிஜ்ஜு பூரா என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி பரவியதும், பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த இடத்திலும், காவல் நிலையத்திலும் திரண்டனர். “மத உணர்வுகளைப் புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று முழக்கமிட்ட அவர்கள், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் சம்பந்தப்பட்ட கோயிலில் ‘புனிதப்படுத்தும் சடங்கு’ (Purification Ceremony) நடைபெறும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
A youth caught urinating on a Shivling inside a temple in Jabalpur#MadhyaPradesh #MPNews #FreePressMP pic.twitter.com/PkqB8Myw2w
— Free Press Madhya Pradesh (@FreePressMP) February 10, 2026
மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சிங்க்ரஹா பகுதி மற்றும் கோயில் வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அமைதி காக்குமாறும் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். “இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது; சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கார்ஹா காவல் நிலைய ஆய்வாளர் பிரசன்னா சர்மா தெரிவித்துள்ளார்.
