தமிழக சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதற்கிடையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். கூட்ட நெரிசலைத் தவிர்க்க காலை 7 மணிக்கே வெள்ளை நிற உடையில் வந்த அவர், அமைதியாக வாக்களித்துவிட்டுச் சென்றார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்களின் உற்சாகத்தை அவர் தனது சாம்சங் கேலக்ஸி S22 மொபைலில் வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர் பயன்படுத்திய போன் மற்றும் அதன் ‘கிரிப்’ ரக கவர் வரை தேடிக் கண்டுபிடித்து இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித் வாக்களித்த பிறகு இரண்டு முக்கிய சர்ச்சைகள் கிளம்பின. அவர் தனது கைவிரல்களைக் காட்டியதை வைத்து, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகச் செய்திகள் பரவின. அதேபோல், செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அவர் “No Need” என்று பதிலளித்ததாக வெளியான தகவலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து முதலமைச்சரிடமே கேள்வி எழுப்பப்படும் அளவுக்கு விஷயம் பெரிதானது.

இருப்பினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அஜித் அதுபோன்ற எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்