வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. அணியின் இந்த மோசமான ஆட்டத்தைக் கண்டு அதிருப்தியடைந்த மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, போட்டி முடிவதற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறியது பேசுபொருளாகியுள்ளது.

208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் தடுமாறியது. பவர்பிளே ஓவர்களில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி நிலைகுலைந்தது. திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்த போதிலும், அக்யீல் ஹொசைன் பந்துவீச்சில் திலக் வர்மா போல்டாகி வெளியேறினார்.

 

அணியின் தூணாகக் கருதப்பட்ட சூர்யகுமார் யாதவ் 36 ரன்களில் ஆட்டமிழந்ததுதான் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யகுமார் அவுட் ஆன அடுத்த நிமிடம், ஸ்டாண்ட்ஸில் அமர்ந்திருந்த ஆகாஷ் அம்பானி மிகுந்த விரக்தியில் தனது இருக்கையை விட்டு எழுந்தார்.

பொதுவாகத் தனது அணிக்கு எப்போதும் ஆதரவு தரும் ஆகாஷ் அம்பானி, நேற்று தனது அணியின் ‘டக்-அவுட்’ பகுதியை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு, எவ்விதக் கருத்தும் சொல்லாமல் விறுவிறுவென்று மைதானத்தை விட்டு வெளியேறினார். வெளியே செல்லும் வழியில், ரசிகர்களையும் பார்த்து “கிளம்புங்கள்” என்பது போல சைகை காட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியில் மும்பை அணி 104 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்டமிழந்தது. 103 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. சொந்த மைதானத்தில் ஒரு பெரிய இலக்கை நோக்கி ஆடும்போது, எந்தவிதப் போராட்டமும் இன்றி மும்பை அணி சரணடைந்தது அதன் உரிமையாளரையே கலங்க  வைத்துள்ளது.