ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. சென்னை அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. தொடக்க முதலே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், வெறும் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். 184 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்த அவர், ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தபோது மைதானமே உற்சாகத்தில் மிதந்தது.
நேற்றைய சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் அறிமுகமாகியுள்ள சாம்சன், தனது 2-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிக சதங்கள் அடித்த ஷேன் வாட்சன், முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட் (தலா 2 சதங்கள்) ஆகியோரது சாதனையைச் சமன் செய்தார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகச் சதம் விளாசிய முதல் சென்னை அணி வீரர் என்ற பெருமையை சாம்சன் பெற்றார். இதுவரை எந்தவொரு சென்னை அணி வீரரும் ஒரு சீசனில் 2 சதங்களை அடித்ததில்லை. ஆனால், இந்த சீசன் பாதி முடிவதற்குள்ளேயே சாம்சன் 2 சதங்களை விளாசிப் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் சாம்சன் அடிக்கும் 8-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலி (9), அபிஷேக் சர்மா (9) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மாவுடன் (8) 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், புள்ளிப் பட்டியலில் சென்னை அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது.
