தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD – Political) தனது தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்துள்ளது இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஜோதிடர் ஒருவருக்கு அரசுப் பதவியா என ஒருபக்கம் விமர்சனங்கள் எழ, இன்னொரு பக்கம் ராதன் பண்டிட்டின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “அஜித்துக்குத்தான் முதல்வர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது, அவரைத்தான் முதலில் அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தேன்.
அவர் மறுத்துவிட்டதால் விட்டுவிட்டேன்” என ராதன் பண்டிட் பேசியிருப்பது விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனத்திற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நிர்வாக ரீதியான பணிகளில் தலையிடாமல் வெறும் ‘அரசியல் ஆலோசகராக’ மட்டுமே இவர் செயல்படுவார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அஜித்தை அரசியலுக்கு அழைக்க முயன்ற ஒருவரை விஜய் தனது முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது கோலிவுட் முதல் கோட்டை வரை ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
