சீனாவைச் சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற மூதாட்டி, பல மாதங்களாக ஹெர்னியேட்டட் டிஸ்க் காரணமாக கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மருந்துகள் பலவற்றையும் பயன்படுத்தியும், எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காததால், அவர் தீவிர வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடன் பழகும் ஒருவர், “முதுகுவலிக்கு உயிருள்ள தவளைகளை விழுங்கினால் நிவாரணம் கிடைக்கும்” என அறிவுரை வழங்கியதை அடுத்து, ஜாங் தனது குடும்பத்தினரிடம் 8 உயிருள்ள தவளைகளை கொண்டு வரச் சொல்லினார். அடுத்த இரண்டு நாட்களில் அந்த மூதாட்டி, மூன்று மற்றும் ஐந்து என மொத்தம் 8 தவளைகளை விழுங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பாதித்து , கடுமையான வயிற்றுவலியால் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜாங்-கிற்கு  சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருக்கு தீவிரமான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டுள்ளதையும், ஆக்ஸிஃபில் செல்களில் சீரற்ற உயர்வு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.

தவளைகளில் பொதுவாகக் காணப்படும் ஸ்பார்கனம் எனும் நாடாப்புழு லார்வா மற்றும் பிற பாக்டீரியாக்களும் அவரது செரிமான அமைப்பை முற்றிலுமாக பாதித்துவிட்டதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து, மருத்துவர்கள் அவ்விரமின்றி சிறப்பு சிகிச்சைகளை அளித்தனர். இரு வாரங்களுக்கும் மேலாக அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பின்னர், ஜாங் நலமடைந்து வீடு திரும்பினார்.

இச்சம்பவம், அறிவியல் பூர்வமற்ற மற்றும் தாந்த்ரீக நம்பிக்கைகளின் விளைவாக ஒரு நபரின் உயிரே ஆபத்தில் ஆழ்த்தப்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. நவீன மருத்துவம் மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் தான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.