உத்திரபிரதேசம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் தனது வீட்டின் பூட்டிய அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்று காலை மாணவியின் தந்தையான மின்சாரப் பணியாளர் வழக்கம்போல் வேலைக்கும், அவரது தாய் பள்ளிப் பணிகளுக்கும் கிளம்பிச் சென்றுள்ளனர். மூத்த மகள் பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்த இல்ல நிலையில், வீட்டிலிருந்த இளைய சகோதரி சில வேலைகளுக்காக அக்காவின் அறைக்கதவைத் தட்டியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, ஏசி போடுவதற்காக விடப்பட்டிருந்த ஜன்னல் போன்ற திறப்பின் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோது, அந்த மாணவி தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார்.
அவளது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் கதவை உடைத்து, மாணவியைக் கீழே இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். எனினும், அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மருத்துவமனை தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எப்போதும் இயல்பான சுபாவம் கொண்டவராகவும், படிப்பில் ஆர்வம் உள்ளவராகவும் அறியப்பட்ட அந்த மாணவியின் அறையிலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படாததால், அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
இதுகுறித்து போலீசார் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
