தமிழகத்தில் திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், ஒரு ‘டிரபிள்’ இன்ஜின் அரசாகச் செயல்பட்டு வருவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, தமிழக மக்களுக்காக பாஜக சார்பில் ஒரு விரிவான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்புடனும், எல்லா பிரிவினரும் சமமாகப் பலனடையும் வகையிலும் அமையும். பாஜக என்பது மக்களுக்கான கட்சி என்பதை இந்த அறிக்கை பிரதிபலிக்கும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக-வின் ‘டபுள் இன்ஜின்’ அரசை ‘டப்பா இன்ஜின்’ என்று விமர்சித்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் மாநகராட்சித் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ‘டிரிபிள் இன்ஜின்’ அரசாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உண்மையில், தமிழகத்தில் உள்ள திமுக அரசுதான் மக்களுக்குத் தொல்லை தரும் ‘டிரபிள்’ (Trouble) இன்ஜினாக உள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் எனப் பல தரப்பினரும் இன்று வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பதாக முதலமைச்சர் கூறுவது தவறு. தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்துப் பிரதமர் மோடி நேற்று தெளிவாக விளக்கியுள்ளார். ‘மத்திய அரசின் உதவி இல்லாமல் உழைக்கிறோம்’ என்று முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் உங்களை உழைக்கத்தானே தேர்ந்தெடுத்தார்கள்? எதிர்க்கட்சிகளே உழைக்கும்போது, ஆளுங்கட்சி உழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும். சமூக நீதி பேசுபவர்கள் வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் ஏன் தீர்வு காணவில்லை?

நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடவில்லை. இது குறித்து செல்வப்பெருந்தகை கேட்கமாட்டார், நான் கேட்கிறேன். பெண்களுக்கு உதவித்தொகை வழங்கிவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் மூலம் ரூ.49 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிறீர்கள். அக்காவிடம் பணத்தைக் கொடுத்து, அண்ணனிடம் இருந்து டாஸ்மாக்கில் வசூலிக்கும் வேலையை அரசு செய்கிறது.

இந்தியாவிலேயே தனிநபர் கடன் சுமை தமிழகத்தில்தான் அதிகம். தமிழகம் இந்தச் சூழலில் இருந்து மீள வேண்டுமானால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லிக்குச் சென்றது சட்ட ரீதியான நடவடிக்கையே தவிர, கூட்டணி அழைப்பிற்காக அல்ல. எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.