டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 187 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தென்னாப்பிரிக்காவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்  முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியிலேயே இந்தியா இத்தகைய படுதோல்வியைச் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.