மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில், குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தனது காரை நடந்து சென்ற  மக்கள் கூட்டத்தில் விட்டதால் , குறைந்தது 30 பேர் காயமடைந்த  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 8.30 மணியளவில் நாகர்தானா பகுதியில் உள்ள துர்கா சௌக் அருகே நடைபெற்றது. வேகமாக வந்த கார் திடீரென சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த வாகனம் சாலையோர வடிகாலில் கவிழ்ந்தது.

விபத்தில் ஈடுபட்டவர் ஹர்ஷ்பால் மகாதேவ் வாக்மரே (40 வயது), இந்திய ராணுவத்தில் அசாமில் பணியாற்றும் அதிகாரி ஆவார். நான்கு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு மகாராஷ்டிராவுக்கு வந்திருந்த இவர், குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

சாலையில் கூட்டமாக இருந்த மக்களை மோதியதும் உள்ளூர்வாசிகள் கடும் கோபமடைந்தனர். உடனடியாக காரை சூழ்ந்த மக்கள், வாக்மாரேவை வெளியே இழுத்து போட்டு  தாக்கினர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“>

 

இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்மாரேவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்தவர்கள் பலரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் மீது வாகனம் மோதிய சம்பவம் நாக்பூர் நகரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.