வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். அதன் பின் வீடு திரும்பிய கோகுல் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது நகை திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து கோகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதோடு, அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஸ்கூட்டரில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடினர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.  அந்த விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பாக்கத்தில் வசித்து வரும் சக்திவேல் என்பவரது மனைவி வேளாங்கண்ணி (27) என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வா (23) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் கொத்தும் தொழில் செய்து வருகிறார்கள்.

இதனால் அவர்களிடம் ஒலி, சுத்தில், இரும்பு ராடு போன்ற பொருட்களும் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் கோகுல் வீட்டின் வழியாக செல்லும் போது அவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்டவர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து நகைகளை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.