தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ரோபோ வீடு சுத்தம் செய்யும் கிளீனரில் உள்ள கேமரா மூலம் தனது மனைவியின் தகாத உறவை கண்டுபிடித்தார். இதுதொடர்பான சிவில் வழக்கில் அவர் வெற்றி பெற்றாலும், அவரது அந்த வெற்றிக்கான விலை மிக அதிகமாகவே இருந்தது. ரகசியமாக அந்தரங்கக் காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக அவர் பின்னர் ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்த நபர் 2021 ஆம் ஆண்டு தனது  திருமணம் செய்து கொண்டு தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தம்பதியினர் தங்களது விடுமுறை நாட்களில் மட்டும் தங்குவதற்காக ஒரு ஹாலிடே ஹோம்  வீட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு புதிய பல் துலக்கும் பிரஷ் இருப்பதை அவர் கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பார்க்கிங் கேரேஜ் கண்காணிப்பு கேமராவில் தமக்குத் பரிச்சயமில்லாத ஒரு நபர் வந்து சென்றதை அவர் பார்த்ததுமே அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த நபர் தனது மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஹாலிடே ஹோம் வீட்டிலிருந்த ரோபோ கிளீனரை  இயக்கினார். அந்தச் சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட ஆடியோ செயல்பாடு இருந்ததால், பயனர்கள் தொலைதூரத்திலிருந்தே பேச முடியும்.

ஆனால், அவர் வெறுமனே தனது மனைவியுடன் பேசுவதற்குப் பதிலாக நேரலை ஒளிபரப்பு மூலம் வீட்டின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கவனிக்கத் தொடங்கினார். அப்போது அந்த கேமரா, அவரது மனைவி மற்றொரு நபருடன் நெருக்கமான சூழ்நிலையில் இருந்ததை ஒளிப்பதிவு செய்துள்ளது. அந்தப் பதிவுகளைச் சேகரித்த கணவன், பின்னர் சிவில் வழக்கில் அவற்றை ஆதாரமாகச் சமர்ப்பித்தார்.

தமது தம்பதியர் உரிமையை மனைவி மீறிவிட்டதாகக் கூறி, ஆரம்பத்தில் 2 மில்லியன் தைவானிய டாலர்கள் (சுமார் ரூ. 60 லட்சம்) இழப்பீடு கோரி அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், அவர்களின் உறவு தகாத முறையில் இருப்பதாக  கூறி, மனைவியும் அந்த மற்ற நபரும் சேர்ந்து 500,000 தைவானிய டாலர்கள் (சுமார் ரூ. 15 லட்சம்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இருப்பினும், கணவன் அந்தப் பதிவுகளை ரகசியமாகப் பயன்படுத்தியது ஒரு புதிய சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அனுமதியின்றி தனது அந்தரங்கப் படங்களை ரகசியமாகப் பதிவு செய்ததாக அவரது மனைவி அவர் மீது புகார் அளித்தார். சிவில் வழக்கில் அந்தப் பதிவுகள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தனது பதிவு நியாயமானது என்று கணவன் வாதிட்டார்.

ஆனால், தனி ஒருவரின் தனியுரிமை உரிமையை விட திருமணக் கடமைகள் மேலானவை அல்ல என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது. மேலும், அந்தப் பதிவு வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. ரோபோ இயங்கும் போது வெளிவந்த விளக்குகள் அல்லது குரல் அறிவிப்புகள், தான் கண்காணிக்கப்படுவதை மனைவி அறிந்திருந்தார் என்பதையோ அல்லது ஒப்புதல் அளித்தார் என்பதையோ நிரூபிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதன் விளைவாக, அங்கீகரிக்கப்படாத தனிப்பட்ட செயல்பாடுகளை ரகசியமாகப் பதிவு செய்த குற்றத்திற்காக அந்த நபருக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனையும், 150,000 தைவானிய டாலர்கள் (சுமார் ரூ. 4.5 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. தைவான் சட்டப்படி, அனுமதியின்றி ஒருவரின் அந்தரங்கச் செயல்களை ரகசியமாகப் பதிவு செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 300,000 தைவானிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.