சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சியின் போது நம் உடல் கொடுக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகளைச் சரியாகக் கவனித்தாலே பெரும் ஆபத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
உடற்பயிற்சியில் ஈடுபடும்போது திடீரென தலைசுற்றலோ அல்லது லேசான தலைவலியோ ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இதயம் சரியான முறையில் இயங்காததால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்போதுதான் இது போன்ற தலைசுற்றல் உண்டாகிறது.
அதேபோல் சாதாரண அளவைத் தாண்டி மூச்சு விடுவதில் கடுமையான சிரமமோ அல்லது மூச்சுத்திணறலோ ஏற்பட்டால் உடனடியாகப் பயிற்சியை நிறுத்த வேண்டும். நுரையீரலுக்குத் தேவையான ஆக்சிஜன் செல்லாதபோது இதயத்தின் செயல்பாட்டில் சிக்கல் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
உடற்பயிற்சி செய்யும்போது வியர்ப்பது இயல்பானதுதான் என்றாலும், வழக்கத்திற்கு மாறாகத் திடீரென உடல் முழுவதும் நனையும் அளவிற்கு அதிகளவில் குளிர்ந்த வியர்வை கொட்டினால் அது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும்.
நெஞ்சு வலி மட்டுமன்றி, இடது கை, தோள்பட்டை மற்றும் தாடைப் பகுதிகளில் திடீரெனக் கடுமையான வலியோ அல்லது இறுக்கமோ ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியை நாட வேண்டும். இந்த அறிகுறிகளை உணர்ந்த உடனே செயல்படுவது உயிரைக் காப்பாற்ற உதவும்.
