வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் வழங்கப்படும் என்ற சோசியல் மீடியா ரீல் விளம்பரத்தால், மும்பையின் மலாட் வெஸ்ட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘இன்ஃபினிட்டி மால்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘NEWME’ ஃபேஷன் ஷோரூம் வாசலில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிகாலை முதலே திரண்டு முண்டியடித்தனர். அந்த நிறுவனம் தங்களது ப்ரோமோஷனுக்காக, முதலில் வரும் 100 முதல் 125 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு ஆடை வெறும் 1 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்த ரீல் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், கடையின் ஊழியர்கள் ஷட்டரைத் திறந்தால் எங்கே மக்கள் உள்ளே புகுந்து கடையைச் சூறையாடி விடுவார்களோ என்ற மரண பயத்தில், கடையைத் திறக்கவே அஞ்சி நடுங்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பயங்கர வைரலாகின.

​நிலைமை கைமீறிப் போனதைத் தொடர்ந்து, உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு அவசர அவசரமாகக் குவிக்கப்பட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். இறுதியாக, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஷோரூம் உரிமையாளர், “இன்றைய தினம் இந்த ஆஃபர் ரத்து செய்யப்படுகிறது, கடை மூடப்படும்” என்று அறிவித்த பின்னரே கூட்டம் மெல்ல மெல்ல கலைந்து சென்றது.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி மும்பை மற்றும் புனேயில் உள்ள தங்களது கிளைகளில் இந்த 1 ரூபாய் ஆஃபர் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக ‘NEWME’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1 ரூபாய் ஆசைக்காகத் திரண்டு மக்கள் நடத்திய இந்த விசித்திர டிராமா தற்போது சோசியல் மீடியாவில் விவாத அனலைக் கிளப்பியுள்ளது.