தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழக்கலங்கள் பேட்டை தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கஜேந்திரன்(42) லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கஜேந்திரன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது பெருமாள் என்பவரது வயலில் காட்டு பன்றிகளுக்காக அமைக்கப்பட்ட மின்வெலியில் சிக்கி கஜேந்திரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஜேந்திரனின் உடலை மீட்க முயற்சி செய்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் கஜேந்திரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மின்வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ பழனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கஜேந்திரனின் உடல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெருமாளை கைது செய்தனர்.