பொதுப் போக்குவரத்துகளில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்து அவ்வப்போது பல கேள்விகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், டெல்லி மெட்ரோவில் பயணித்த ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் வீடியோவையும் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்த நபரின் கைவரிசையும், அதனை அந்தப் பெண் புத்திசாலித்தனமாக எதிர்கொண்ட விதமும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரவீண்யா என்ற பெண்மணி டெல்லி மெட்ரோவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு நபர், தனது அனுமதியின்றித் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரகசியமாகப் பதிவு செய்து வருவதைக் கவனித்து அதிர்ந்துபோனார். எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக அந்த நபரின் அருகில் சென்ற அவர், போனைச் சோதிக்கக் கோரினார்.
தான் மாட்டியதை உணர்ந்த அந்த நபர், உடனடியாகத் தான் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவசரமாக நீக்கிவிட்டு, “எதுவும் இல்லை” என்பதுபோல் அந்தப் பெண்ணிடம் போனை நீட்டினார். இருப்பினும், அந்த நபர் ஏமாற்ற முயல்வதைப் புரிந்துகொண்ட பிரவீண்யா, போனில் உள்ள Folder-ஐ திறந்து பார்த்தார். அவர் எதிர்பார்த்தபடியே, அங்கே தான் அழிக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் பாதுகாப்பாக இருந்தன. இதன் மூலம் அந்த நபரின் மோசமான செயல் கையும் களவுமாகப் பிடிபட்டது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் கண்டிப்புடன் பேசிய பிரவீண்யா, எந்தவொரு பெண்ணின் அனுமதியும் இல்லாமல் அவர்களின் புகைப்படங்களை எடுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்று எச்சரித்தார். தவறை உணர்ந்த அந்த நபரும் தனது செயலுக்குப் பயந்து போய், அந்தப் புகைப்படங்களை நிரந்தரமாக அழித்துவிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான முழு விடியோவையும் பிரவீண்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “பெண்கள் எங்குதான் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என்ற வலி நிறைந்த கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கெனத் தனிப் பெட்டிகள் எதற்காக அவசியமாகத் தேவைப்படுகின்றன என்பதை இதுபோன்ற சம்பவங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பல நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். அஞ்சாமல் தைரியமாகத் தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் துணிச்சலுக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
