2ஆவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.. 

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1:0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி புனேயில் இன்று இரவு 7 மணி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயத்தால் சாம்சன் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். அதேபோல ஹர்ஷல் படேலுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசாங்காவும், குசால் மெண்டிசும் அதிரடி ஆட்டத்தை  வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா முதல் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் 2ஆவது ஓவரில் தொடர்ந்து 3 நோபல் வீச அதனை குசால் மெண்டிஸ் பவுண்டரி, சிக்சர் என அடித்தார் இதனால் அந்த ஓவரில் 19 ரன்கள் இலங்கை அணிக்கு கிடைத்தது. நன்கு தொடங்கிய இலங்கை அணி பவர் பிளேவில் 6 ஓவர் முடிவில் 55 ரன்கள் சேர்த்தது.

இந்த ஜோடி சிறப்பாக ஆடி  8 ஓவருக்கு 80 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ்  அதிரடியாக அரைசதம் கடந்தார். அதன்பின் சாஹல் வீசிய 9ஆவது ஓவரில் குசால் மெண்டிஸ் 31 பந்துகளில் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்) 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த ராஜபக்சே (2) உம்ரான் மாலிக் வேகத்தில் போல்ட் ஆகி  வெளியேற்றினார். இதையடுத்து அசலங்காவும், நிசாங்காவும் ஜோடி சேர்ந்து ஆடிய நிலையில், துவக்க வீரர் நிசாங்கா 33 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த தனஞ்செய டி சில்வா 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இருப்பினும் அதிரடியாக 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த அசலங்கா 16ஆவது ஓவரில் உம்ரான் மாலிக் வேகத்தில் அவுட் ஆனார். அதை தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஹசரங்காவும் டக் அவுட் ஆனார். இலங்கை அணி 16 ஓவரில் 138 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்தது. இதனால் 170 ரன்களுக்குள் இந்திய அணி கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், கடைசியாக கேப்டன் தாசும் ஷானகா அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் ஷானகா 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி என விளாச 21 ரன்களும், அர்ஷ்தீப் சிங் விஷய 19ஆவது ஓவரில் மீண்டும் ஷானகா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடிக்க அந்த ஓவரில் 18 ரன்களும் கிடைத்தது. கடைசியாக  சிவம் மாவியையும் ஷானகா விட்டு வைக்கவில்லை.. அந்த ஓவரில் 3 சிக்சர் பறக்க விட 20 ரன்கள் கிடைத்தது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 206 ரன்கள் குவித்தது.

கேப்டன் சானகா 22 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 56* ரன்களுடனும், கருணாரத்னே 11 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 5 நோபல் வீசியது மட்டுமில்லாமல் 2 ஓவரில் 37 ரன்களை வாரி வழங்கியுள்ளார். மாவியும் 4 ஓவரில் 53 ரன்களை வாரி வழங்கியுள்ளார். உம்ரான் மாலிக் 48 ரன்கள் கொடுத்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 2 விக்கெட் மற்றும் சாஹல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். தற்போது இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.