சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி விழா ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக விழாவில் சர்வதேச புத்தக கண்காட்சியும் இடம் பெற்றது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 தினங்களில் நடைபெற்றது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றார்கள்.

இந்த சர்வதேச புத்தக கண்காட்சிக்காக 30 ஏசி அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் சர்வதேச புத்தக கண்காட்சியின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின்  விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவின்போது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாட நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக மருத்துவ புத்தகங்கள் தமிழில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது என்றார். மேலும் தமிழகத்தில் தமிழாட்சி நடக்கும் போது இது போன்ற பன்னாட்டு புத்தக கண்காட்சி நடப்பது வியப்புக்குரியது அல்ல என்றும் கூறினார்.