மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் திருவான்மியூர், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் உரிய ரசீதுகள் இல்லாமல் அதிக அளவில் வலி நிவாரணி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதனால் புலனாய்வு பிரிவு மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்து கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மெட்பிளஸ், அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் வருகைக்குப்பின் சிறிய மருந்து கடைகளில் விற்பனை குறைந்துவிட்டதால் அந்த கடைகளில் உரிமையாளர்கள் செல்போன் ரீசார்ஜ் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.