திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோசப்(73) என்பவர் அப்பகுதியில் குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். இவரது மனைவி லலிதாபாய் (64). இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் சம்பவநாளன்று ஜோசப் மற்றும் அவரது மனைவி லலிதாபாய் இருவரும் இரவு நேரத்தில் அருகிலுள்ள ரப்பர் தோட்டத்திற்கு சென்ற அவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மறுநாள் காலையில் தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக சென்ற குழாய்த் தொழிலாளி ஒருவர் அங்கு ஜோசப் மற்றும் அவரது மனைவி பிணமாய் கிடப்பதை பார்த்தார். அதன்பின் தொழிலாளி இதுகுறித்து தம்பதியினர்களின் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டதில் அங்கு சடலங்களுக்கு அருகே ஆசிட் பாட்டில் ஒன்று கிடப்பதை பார்த்தனர்.
இதனால் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை அங்கு வரவழைத்து தடயங்களை சேகரிக்க தொடங்கினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தம்பதியினர்களின் உறவினர்களிடம் இது பற்றி விசாரணை நடத்தியதில் ஜோசப் வீடு கட்டுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கியுள்ளதாகவும் அதை அந்த நிறுவன அதிகாரிகள் திருப்பி கேட்டு மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஜோசப் மகனின் இருதய நோய் சிகிச்சைக்காக பெரும் தொகையை செலவழித்ததால் வீட்டுக் கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்ததாகவும் உறவினர்கள் வேதனையுடன் கூறினர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.