கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்களின் 2 மகள்களும் நர்சிங் படித்து வரும் நிலையில், மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். இதில்  ஹரிதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதோடு வீட்டு செலவிற்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இது தொடர்பாக லதா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் ஹரிதாசை அழைத்து எச்சரித்து அனுப்பினர். கடந்த 6-ம் தேதி வழக்கம் போல் ஹரிதாஸ் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லதா வெந்நீரை எடுத்து கணவரின் மீது ஊற்றினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து லதா மீது தக்கலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தற்போது லதாவை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.