கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நீர் மின் திட்ட நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி சுப்பிரமணியனின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி சுப்பிரமணியன் பல்வேறு தவனைகளாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 30 லட்ச ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுப்பிரமணியன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.