சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் கடந்த 3-ஆம் தேதி வரை 19,227 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 124 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களின் மாதிரிகள் கொரோனா மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 40 பேருக்கான மாதிரி முடிவுகள் வெளிவந்துள்ளது.

இதில் 11 பேருக்கு ஓமைக்ரன் துணை வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிறகு 14 பேருக்கு எக்ஸ்பிபி.‌1 வைரஸ் தொற்றும், ஒருவருக்கு பிஎஃப் 7.4.1 வகை வைரஸ் தொற்றும் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வகை உருமாறிய வைரஸ் தொற்றுகள் புதிது கிடையாது என்றும், இவை ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றார்கள். மேலும் இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் புதிய வகை வைரஸ் தொற்றை நினைத்து அச்சப்பட வேண்டாம். ஆனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என  என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.