தமிழக வெற்றிக் கழக அரசு 2026-27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் மாநிலத்தின் நிதி நிலைமையையும் சமாளிக்க வேண்டிய சவாலை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தின் கடன் சுமை சுமார் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், புதிய மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.55,775 கோடியாக உள்ளது. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ், மகளிருக்கான வெற்றிப் பயணம், அண்ணன் சீர், தாய் மாமன் தங்க மோதிரம், கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி உள்ளிட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டியிருப்பதால், எதிர்காலத்தில் அரசின் செலவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், வரிகளை அதிகமாக உயர்த்தாமல் நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் சுமார் ரூ.1,000 கோடியும், பொது டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல், கனிம வளங்கள் உள்ளிட்ட துறைகளில் வருவாய் இழப்பைத் தடுப்பதன் மூலம் ரூ.15,000 கோடி வரையிலும் கூடுதல் வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக நிதி செலவிடுவதால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி பாதிக்கப்படலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அரசின் நிரந்தர செலவுகளும் அதிகரிக்கலாம்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழக வெற்றிக்கழக அரசு : கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தினால் சமாளிக்க முடியுமா? : வல்லுநர்கள் கணிப்பு தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தாக்கல்… pic.twitter.com/W6MlSFCnqS
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 24, 2026
“>
எனவே, புதிய வருவாய் திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தருவதும், நிர்வாக சீர்திருத்தங்கள் வெற்றியடைவதும் முக்கியமாகும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் கடன் சுமையையும் கட்டுப்படுத்துவது தவெக அரசுக்கு முக்கியமான நிதி மேலாண்மை சவாலாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
