பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் சுபேலால் பஸ்வான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் 3-வது முறையாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சந்திரவதி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சந்திரபதி தேவியிடம் பஸ்வான் தன்னுடைய இரண்டாவது மனைவி மம்தா குமாரியுடன் சேர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சந்திரவதி தேவி திடீரென மாயமானதால் அவருடைய உறவினர்கள் பஸ்வானிடம் கேட்க முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் உறவினர்கள் காவல் நிலையத்தில் பஸ்வான் மீது புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சந்திரவதி தேவியை அவருடைய கணவர் கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.
தற்போது பஸ்வான் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருவதோடு இரண்டாவது மனைவி மம்தா குமாரியையும் தேடி வருகிறார்கள். மேலும் முதல் மனைவியையும் பஸ்வான் வரதட்சனைக்காக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். அதோடு முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையும் சந்தேகமான முறையில் இறந்துள்ளதால் பஸ்வணை பிடித்து விசாரித்தால்தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.