அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர் டிஎஸ்பி மற்றும்‌ மாஜிஸ்ரேட்டை லாரி ஏற்றி கொலை செய்யும் முயற்சி செய்துள்ளார்.

ஆனால் சுதாகரித்துக் கொண்ட அதிகாரிகள் உடனே அங்கிருந்து ஓடியதால் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலையில் ஆரவல்லி மலைப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் சுரங்க பணிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி பிஷ்னோய் ஆய்வுக்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நிலையில் கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகளை டிஎஸ்பி வழிமறித்துள்ளார். அப்போது ஒரு லாரி டிரைவர் திடீரென டிஎஸ்பி பிஷ்னோய் மீது லாரிஏற்றினார். இதில் டிஎஸ்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு டிஎஸ்பி மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.