கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி இரவும் பகலும் உழைத்தாலும், பணிநீக்கம் என்று வரும்போது அந்த நிறுவனங்கள் காட்டும் இரக்கமற்ற முகம் பல நேரங்களில் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

அந்த வகையில், சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் சொத்தான மடிக்கணினியை முறைப்படி திருப்பிக் கொடுப்பதற்காகத் தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் அலுவலகத்திற்குச் சென்றபோது, அவருக்கு நேர்ந்த கசப்பான அவமானகரமான அனுபவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனத்திற்காகத் தான் ஆற்றிய உழைப்பையும் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டு அவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்திய சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

வேலையிழந்த சோகத்தில் இருந்த அந்த ஊழியர், நிறுவனத்தின் பொருட்களைச் சரியாக ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு, பராமரிக்க ஆள் இல்லாததால் தனது இரண்டு வயதுக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு அலுவலகம் வரை சென்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த வரவேற்பறைக்கே அவர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, செக்யூரிட்டி கேட்கேட்டிலேயே நிறுத்தப்பட்டார். ஒரு கட்டத்தில், அவரிடமிருந்த லேப்டாப்பை வாங்கக்கூட அதிகாரிகள் யாரும் நேரில் வரமால், வாசலிலேயே அவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சிறிய குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலிலும், அவமானத்திலும் நின்ற அந்தத் தருணம், கார்ப்பரேட் உலகம் எவ்வளவு இரக்கமற்றது என்பதைத் தனக்கு உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தான் கற்றுக்கொண்ட கசப்பான பாடத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த ஊழியர், “நிறுவனங்கள் நமக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நாம் அங்கு வேலை செய்யும் வரை மட்டுமே; நாம் வெளியேறிய மறுநொடியே நாம் அவர்களுக்கு வெறும் அந்நியர்கள் தான்.

எனவே எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தையும் உங்கள் சொந்தக் குடும்பமாக நினைத்து ஏமாந்துவிடாதீர்கள்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இணையவாசிகள் அந்த ஊழியருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘ ‘மனிதநேயமற்ற இந்த கார்ப்பரேட் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்’ என்றும், ‘உழைத்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையாவது வழங்கப்பட வேண்டும்’ என்றும் சோஷியல் மீடியாவில் காரசார விவாதங்கள் வெடித்துள்ளன.