திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 2 தலித் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எவிடென்ஸ் அமைப்பின் தலைவர் எவிடென்ஸ் கதிர் இது தொடர்பாக ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியை பக்கத்தில் வராதீர்கள். நாற்றம் அடிக்கிறது. யாரையாவது இழுத்துக் கொண்டு போகப் போறீங்களா என்ற வார்த்தைகளால் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் மனதை ரணப்படுத்தியதால் வேதனையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மனதை உலுக்குகிறது. இந்த சம்பவம் சின்னலாம்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது.

நான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவிகளையும் சந்தித்து பேசிய போது ஆசிரியர் படுத்திய கொடுமைகள் தெரிய வந்தது. கடந்த 2 மாத காலமாகவே ஆசிரியை மாணவிகளை துன்புறுத்தியதோடு மற்ற மாணவிகளுடன் சேரக்கூடாது என துன்புறுத்தியுள்ளார். தலித் மாணவிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது தான் வேதனையான விஷயம். சில சமயங்களில் சக்கிலிச்சி மற்றும் பறைச்சி போன்ற வார்த்தைகளால் ஆசிரியை திட்டியுள்ளதோடு கன்னடத்திலும் திட்டி உள்ளார். அந்தப் பள்ளியில் 48 ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு தலித் ஆசிரியை கூட கிடையாது. மேலும் தமிழ்நாட்டில் சாதி பெயரால் கல்லூரிகள் மட்டுமின்றி பள்ளிகளும் இருக்கும் நிலையில், மானுடத்தை மதிக்கும் நீதிக் கல்வி வளர்ந்தால்தான் சாதி கல்வி ஒழியும் என்று பதிவிட்டுள்ளார்.