திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசிய போது, தி.மு.க குறித்து விமர்சனம் செய்துள்ளார். அந்த சமயம் அங்கு வந்த 10-கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி காலி மது பாட்டில்களை வீசி எறிந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது பாட்டில்களை வீசிவிட்டு தப்பி ஓடியவர்களில் இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர்.
அதன்பின் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக கூட்டம் சிறிது நேரம் தடைபட்டுள்ளது. இதனையடுத்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தர் தலைமையில் 100-கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.