தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுன்டர்பார் ஃபிலிம்ஸ் ‘ஓம்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும் தன் பங்கிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இப்படத்தின் பாடலைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘அலகா லூவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், திரையரங்குகளில் ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு மிரட்டலான குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடலுக்கு, ஃபிரான்சிஸ் மற்றும் கட்டாகா கோரல் குழுவினர் கூடுதல் குரல் கொடுத்துள்ளனர்.

ரோகேஷின் துள்ளலான வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் செம மாஸான நடன அசைவுகளை அமைத்துள்ளார். பாடலின் வீடியோவில் நடிகர் தனுஷ் மிகவும் ஆற்றலுடன் கடினமான நடன அசைவுகளை அசத்தலாக ஆடியுள்ளார். குறிப்பாக, நானி தனது ‘தி பாரடைஸ்’ படத்தில் ஆடிய ‘ஹூக் ஸ்டெப்’ போல, இந்தப் பாடலிலும் தனுஷ் மிரட்டலான ஹூக் ஸ்டெப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் மூலம் மெகா ஸ்டார் மம்மூட்டியின் கதாபாத்திரம் எப்படி இருக்கப் போகிறது என்ற முழுமையான மற்றும் தெளிவான முதல் பார்வை

“>

இந்தப் பாடலின் மூலம் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் மம்மூட்டியின் முகம் முழுமையாகத் தெரியாத நிலையில், தற்போது இந்தப் பாடலின் மூலம் அவரது கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சமீபத்தில் தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷ், மம்மூட்டி மற்றும் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

தனுஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள இயக்குநர், இப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.