திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும். கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 5 வருடங்கள் தசரத் தெப்பர்மாவும், 20 ஆண்டுகள் மாணிக் சர்க்காரும் என இரு கம்யூனிஸ்ட் முதல்வர்கள் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தற்போது வரும் தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்றிய போது பிப்லாப் குமார் யாதவ் முதல்வராக பதவியில் அமர்ந்தார்.
ஆனால் கடந்த வருடம் அதிருப்தி மனநிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து பிப்லாப் குமார் யாதவை நீக்கிவிட்டு, மாணிக் சாகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ்-இடதுசாரிகள், பாஜக என இருமுனை போட்டிகள் நிலவும் நிலையில் தற்போது மூன்றாவது கட்சியாக திப்ரா மோதா களத்தில் இறங்க தயாராகி வருகிறது. இந்த கட்சி திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிரத்யோத் பிக்ராம் மாணிக்யா தெப்பர்மா என்பவரால் தொடங்கப்பட்டது. மேலும் இந்த கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெரும்பான்மையாக வகிப்பதால் தற்போது திரிபுராவில் மும்முனை போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.