
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது கொள்கை எதிரி பாஜக மற்றும் அரசியல் எதிரி திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என நடிகர் விஜய் கூறினார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை தனித்து சந்திப்போம் எனவும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் விஜய் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இரு கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என தெளிவுபடுத்தினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எம்பி கனிமொழியிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, நடிகர் விஜய் அடுத்து வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறியது வரவேற்கத்தக்கது. அதற்காக நாங்கள் வாழ்த்துகிறோம்.
அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தனித்து போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இருக்காது. அதிமுகவுக்கு வேண்டுமென்றால் சவாலாக இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் கண்டிப்பாக திமுகவுக்கு வெற்றி நிச்சயம். மேலும் தனித்துப் போட்டியிடுவது என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்று கூறினார்.