வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு தொலைதூர ஏவுகணைகளை சோதனை நடத்தியது. கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. கொரியா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் நீண்ட நாட்களாகவே பதட்டமான சூழல் இருந்து வருகிறது. தென்கொரியா, வடகொரியா இடையேயான மோதல் விவகாரத்தில் தென்கொரியாவின் பக்கம் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. வடகொரியா ஆதரவு தரப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.
குறிப்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் வடகொரிய அதிபர் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா ஒரே நாளில் நான்கு தொலைதூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்து மிரட்டல் விடுத்துள்ளது
இது தொடர்பாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏவுகணைகளின் திறன் மற்றும் நம்பகத்தன்மையை பரிசோதித்ததாக குறிப்பிட்டுள்ளது. கிழக்கு கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சுமார் மூன்று மணி நேரம் பறந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவின் அணு ஆயுத ஒரு படைகளின் தயார் நிலையை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அனைத்து திசைகளில் இருந்தும் எதிரி படைகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் திறனை ஏவுகணை சோதனை வலுபடுத்தியதாக வடகொரியா கூறியுள்ளது இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அரசு தொடர்ச்சியாக பல பொருளாதார தடைகளை விதித்த பின்னரும் வடகொரியா அஞ்சாமல் தனது அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.