கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன்(39) விருதாச்சலம் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா(36) என்ற தங்கை உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட கலியனை விருதாச்சலம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அப்போது பணியில் இருந்து பெண் டாக்டர் விஜயவதி மற்றும் செவிலியர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கலியனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். பிறகு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

அப்போது கோபத்தில் வேல்முருகனும், சுஜாதாவும் எங்கள் தந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் உயிர் காக்கும் கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, இ.சி.ஜி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வேல்முருகன் மற்றும் சுஜாதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விளக்கினை விசாரித்த விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் வேல்முருகன் தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உயிர்காக்கும் கருவிகளை சேதப்படுத்தியதற்காக 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவும், சுஜாதாவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

அதனை கட்ட தவறினால் சுஜாதா 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இது குறித்து வக்கீல் சுப்பிரமணியன் கூறியதாவது, மருத்துவமனை உபகரணங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டவருக்கு தமிழ்நாடு மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் 2 பிரிவுகளின் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை ஆகும். மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.