கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு கிளியுடன் சென்றுள்ளார். அந்தப் பூங்காவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் என்பவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கிளி டாக்டரின் முதுகில் பறந்து வந்து நின்று தனது இறக்கையால் பலமுறை அடித்துள்ளது. இதில் டாக்டர் பயந்து கீழே விழுந்துள்ளார். இதனால் டாக்டரின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின் டாக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார காலம் சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் அவர் முழுமையாக குணமடைவதற்கு மூன்று மாத காலம் ஆகும் எனவும் மேலும் ஆறு மாதங்களுக்கு டாக்டரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த காரணத்தினால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் உரிய நிவாரணம் கேட்டு கிளியின் உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாதம் சிறை தண்டனையும் 74 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.