இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்.சி மையம் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுமொத்த நகரமே புதைய கூடும் என தெரிவித்துள்ளது. கார்ட்டோசாட் 2 எஸ் செயற்கைக்கோளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படம் ஜோஷிமட் நகரின் எதிர்காலம் குறித்து துல்லியமாக கணிக்கும் விதம் விதமாக அமைந்துள்ளது. இஸ்ரோவின் துவக்க நிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மிகவும் அபாயம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டிருக்கும் இடத்திலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை உத்தரகாண்ட அரசு மேற்கொண்டு வருகிறது.

நிலச்சரிவு நிகழ்வானது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 8.9 சென்டிமீட்டர் அளவுக்கு நிலம் சரிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நிலச்சரிவின் வேகம் டிசம்பர் முதல் ஜனவரி வரை வெறும் 12 நாட்களில் 5.4 சென்டிமீட்டர் அளவுக்கு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஜோஷிமட் ஒளலி சாலையும் கூட உருக்குலைந்து போகலாம் என செயற்கைக்கோள் புகைப்படம் தெரிவித்துள்ளது. மேலும் வீடு மற்றும் சாலைகளில் ஏற்பட்டிருக்கும் விரிசல் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோவின் முதற்கட்ட ஆய்வறிக்கை  அதிர்ச்சி ஊட்டுவதாகவே அமைந்துள்ளது.