டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு மத்திய உள் விவகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிறப்பு காவல் ஆணையர் ஷாலினி சிங் தலைமையிலான விசாரணை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சம்பவம் நடைபெற்ற பகுதியில் ஒரு காவலர் கூட ரோந்து பணியில் ஈடுபடாதது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளனர்.