உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், திருமணம் நின்ற கடுப்பில் இளைஞன் ஒருவன் நள்ளிரவில் சுவரைத் தாண்டி குதித்து, தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சகோதரிகள் மீது அமிலத்தை வீசி எறிந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு அந்த இளைஞனுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூரச் செயலைச் செய்யத் திட்டமிட்டுள்ளான்.
நள்ளிரவு நேரத்தில் அனைவரும் ஆழந்த உறக்கத்தில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, திருட்டுத்தனமாக வீட்டிற்குள் புகுந்து இந்த இரக்கமற்றத் தாக்குதலை நடத்தியுள்ளான். அமிலம் வீசப்பட்ட அடுத்த நொடியே, எரியும் வேதனையில் அந்தச் சகோதரிகள் அலறியலறிச் சத்தமிட்டுள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்துப் பார்த்தபோது, இரு பெண்களும் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரு சகோதரிகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாகக் களத்தில் இறங்கி, தப்பியோடிய அந்த இளைஞனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண்ணின் நிராகரிப்பையும், திருமணம் நின்றதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர்களின் வாழ்க்கையையே உருக்குலைக்கும் வகையில் அமிலம் வீசிய இந்த வக்கிர எண்ணம் கொண்ட நபரின் செயல் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குச் சட்டம் மிகக் கடுமையான தண்டனையை வழங்கி, பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு உரிய நீதியை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
