கோவை அருகே சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒன்று. அதில் முதலில் திமுக ஆதரவு பெற்ற சுதா என்பவர் 2553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதிமுக ஆதரவு பெற்ற சவுந்தர வடிவு என்பவர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்தார்.

இதனை எதிர்த்து தான் முதலில் வெற்றி பெற்றதாக அறிவித்த திமுக ஆதரவு பெற்ற சுதா என்பவர் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்  விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தேர்தல் முடிவுகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோவை மாவட்ட ஆட்சியருக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாளில் மறுவாக்கு  எண்ணிக்கை நடத்த உரிய அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கூடுதலாக 2 உத்தரவுகளையும் அதில் பிறப்பித்துள்ளது. அதில், மறு வாக்கு எண்ணிக்கை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டு இந்த ஆவணங்களுக்கு பிறகு அடுத்த கட்ட முடிவுகள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு ஒன்றை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.